Tuesday, March 31, 2015

அரசூர் வம்சம்

எந்த ஒரு இனத்துக்கும், சமூகத்திற்கும் மிகக்கடினமான விடயம் தங்கள் பண்பாடு , கலாச்சாரத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவது. இப்படி பாதுகாக்கவோ கடத்தவோ முடியாமல் அழிந்து போன இனம், மொழி பல. ஆனால் அப்படி தங்கள் கலச்சாரத்தை பாதுகாத்து கொள்ளும் இனங்கள் தனித்து நிற்கும். விமர்சனம் எத்தனையோ இருந்தாலும் யூதர்களை எனக்கு பிடிக்க முக்கிய காரணமே இது தான். யூத மதத்தில் மதம் மாறுதல் என்ற ஒன்றே இல்லை பிறப்பால் மட்டுமே யூத மதத்தினராய் இருக்க முடியும் அப்படி இருந்தும் அரசியல் நெருக்கடிகள், யூத மதத்திலிருந்து பிற மதத்திற்கு மதமாற்றங்கள், உலகம் முழுக்க எப்போதும் விரட்டியடிப்பு என பல துன்பங்களை சந்திக்க நேர்ந்தாலும் யூத பண்பாடு, கலாச்சாரம் என்ற ஒன்றை எப்போதும் அவர்கள் விட்டுக்கொடுத்ததேயில்லை. அதனால் தான் இன்று இஸ்ரேல் என்ற தனி நாடு அவர்களுக்கு கிட்டியது.

அரசூர் வம்சம் சுமார் 150-200 வருடம் முன்னர் நடக்கும் கதை. வாரிசில்லா, அதிகாரமில்லா ராஜாவும் , அவர் அரண்மனை அருகே வசிக்கும்  ராஜாவை விட வசதியான  புகையிலை விற்கும் பிராமணக்குடும்பமும் தான் கதைக்களம்.

இருத்தல் வேண்டி புகையிலை விற்கிறது பிராமணக்குடும்பம், தங்கள் தொழில் இதுவல்ல என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லாமல் இல்லை ஆனால் மிகச்சாதரணமாக கடந்து போகின்றனர். மெத்த படித்து சித்தம் கலங்கிய சாமி நாதன், கொட்டக்குடி தாசியின் நினைப்பில் திரியும் சங்கரன், வெள்ளைக்காரியுடன் உறவு கொள்ளும் பிராமணன், காசுக்கு உணவு விற்கும் பிராமணன், ஈமக்கிரியைகள் செய்வதே வாழ்க்கையாகிப்போனதே எனக்கலங்கும் பிராமணன், வேதமாவது ஒன்றாவது என படித்து முடித்து ஆங்கிலேயனிடம் வேலைக்கு செல்லும் பிராமணன், வட்டியில்லாமல் கடன் கிடைக்கிறதே என மதம் மாறும் பிராமணன்  என நாவல் முழுதும் பல்வேறு காரணிகளால் தங்கள் பண்பாட்டை காப்பாற்ற முடியாமல் சிதறுன்னுடு போகும் காலமாற்றத்தை புனைவின் வழியே சொல்கிறது நாவல்.

நாவலின் ஆரம்பத்தில் ராஜவைப்பற்றிய  வரிகளை படித்ததும் மனதில் விரிந்தது போருக்கு படை, பரிவாரத்தோடு போகும் கம்பீர ராஜ ஆனால் இந்த ராஜாவோ அதிகாரத்தையெல்லாம் ஆங்கிலேயர் பிடிங்கி கொள்ள, மிச்சமீதியாவாது காப்பாற்றிக்கொள்ள தனக்கு ஒரு வாரிசு வேண்டி கிடக்கும் ராஜா. தன் வேலையாட்களுக்கு கூட சம்பளம் தர முடியாமல் உள்ளுக்குள் புழுங்கி கிடக்கும் ராஜா.

இப்படி கனமான பாத்திரங்கள், கனமான நிகழ்வுகள் கொண்ட கதை சோகமாய் செல்கிறதா என்றால் இல்லை. அவர்களை கண்டு பரிதாபப்படுகிறாரா , பகடி செய்கிறாரா என தெரியாத எழுத்து. அவற்றை நம் விருப்பத்திற்கு விட்டு விடுகிறார் ஆசிரியர்.

சுவாரசியமான பாத்திரங்கள் பல

பனியன் சகோதரர்கள் - இந்நாவலை காலத்தின் குறுக்காய் காட்சிப்படுத்தும் இரண்டு பேர், மின்னணு பொருட்களை காண்பித்து காசு பார்க்கிறார்கள், அத்தனையும் அடகில் மூழ்கிப்போக காலம் அவர்களை இறந்த காலத்திலையே நிறுத்தி வைக்கிறது.

கிட்டவய்யன் - எதோ ஒரு பிராமணன் கிறிஸ்தியனுடன் சம்பந்தம் வைத்தான் என்பதால் ஒரு வம்சத்தையே ஒதுக்கி வைக்கின்றனர். அதில் ஒருவன் உணவு கேட்டு வரும்போது எட்டி உதைக்கிறார் கிட்டவய்யன். முடிவில் உணவுக்கடை வைக்க வட்டி இல்லாமல் கடன் கிடைக்கிறது என்பதற்காக கிறிஸ்தியனாக மாறுகிறார்.

முன்னோர்கள் - கதை மாந்தரிடம் ,அவ்வப்போது முன்னோர்கள் வந்து அறிவுரைகளையும், தங்கள் தேவைகளையும் சொல்லுகின்றனர் முக்கியமாய் ராஜாவிடமும். முன்னோர்கள் எனும் பாத்திரங்களை நான் மாந்தர்களின்  மனசாட்சி என எடுத்துக்கொண்டேன். இப்படி பலர்.

தீவிர வாசிப்பில் இருக்கும் ஒருவருக்கு அரசூர் வம்சம் நல்ல வாசிப்பனுவத்தை கொடுக்கும், புதுதாய் படிப்பவர்கள் மொழி நடையில் சற்று தடுமாறிப்போனாலும் சுதாரித்துக்கொள்ளலாம்.

460 பக்க நாவல், முதல் சில அத்தியாயம் படிக்க நேரம் எடுத்தாலும் அடுத்து நாவல் நம்மை உள்வாங்கி கொண்டது. நாவலின் காலத்தை போல் பக்கங்களும் பறக்க தொடங்கிவிட்டன.


அரசூர் வம்சம், இரா.முருகன்

விலை : ரூ.175

பக்கங்கள் : 464

இணையத்தில் வாங்க: http://nhm.in/printedbook/103/Arasur%20Vamsam

No comments: