Monday, June 25, 2018

ஆப்பிளுக்கு முன்

ஆப்பிளுக்கு முன் எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் எழுதிய நாவல். சில மோசமான அனுபவங்கள் காரணமாக முகநூல் வழி அறிமுகமான எழுத்தாளர்களை தவிர்த்தே வந்தேன்.

இப்புத்தக வெளியீட்டு விழாவில் ரமேஷ் வைத்யாவின் நாவல் பற்றிய அறிமுகம் மிக சுவாரசியம் என்றாலும் அது புத்தகம் வாங்கும் ஆவலை தூண்டவில்லை. நண்பனிடம் இது பற்றி நண்பனிடம் பேசிக்கொண்டிருந்த போது அவன் சொன்னது "அதாண்டா தொழில் நேக்கு, உருட்டு அப்படி".

முக நூலில் இப்படி ஒரு பதிவு பார்த்தேன் "உடல்  நினைவில் காடுள்ள மிருகம் - ஆப்பிளுக்கு முன் நாவலிலிருந்து", நாவலில் இது மட்டுமே இருக்கிறது, இதை தவிர இந்த வரிகளுக்கு வேறு எந்த விளக்கமும் இல்லையெனில் எழுத்தாளருக்கு ஒரு கைதட்டல்.

நக்கீரன் எழுதிய நாடோடிகள் நாவலில் வரும் வரிகள் "நினைவில் காடுள்ள மிருகம், எளிதில் அடங்குவதில்லை", எழுத்தாளர் இவ்வாறு சொல்லவருகிறார் ",உடல் நினைவில் காடுள்ள மிருகம், அது எளிதில் அடங்குவதில்லை" , ஆக எழுத்தாளர் ஒரு குறிப்பை (அதுவும் மற்றொரு நாவலின் வரி) மட்டும் சொல்லிவிட்டு மீதத்தை வாசகனே பார்த்துக்கொள்ளட்டும் என நினைக்கிறார். பொதுவாய் நம் நாவல்கள் காட்சிகளின் விவரிப்பே, குறிப்பை மட்டும் சொல்லிவிட்டு வாசகன் பார்த்துக்கொள்ளட்டும் என நினைக்கும் நாவல்கள் மிகக்குறைவு.

ஆப்பிளுக்கு முன் அந்த வகை நாவல் என்றால் விரைவில் வாங்கிவிடுவேன்......Thursday, October 12, 2017

மணற்கேணி

ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
விலை : Rs.180
பக்கங்கள் : 312
யுவன் சந்திரசேகர் தமிழின் தற்கால  பின் நவீனத்துவ கவிஞர்,எழுத்தாளர் அவர் எழுதிய மணற்கேணி .நூலகத்தில் எதேச்சையாகத்தான் படிக்க கிடைத்தது.பொதுவாக புத்தகங்களை மிக வேகமாக படித்து முடித்து விடும் என்னால் இந்த புத்தகத்தை முடிக்க ஒரு மாத காலம் பிடித்தது.எளிதில் கடந்து போய் விட முடியாத புத்தகம்.எனக்குள் முதல் முறையாக படித்ததும் பிரமிப்பை ஏற்படுத்தியவர்கள் இருவர் ஒருவர் சாரு நிவேதிதா மற்றுமொருவர் யுவன் சந்திர சேகரே.

மொத்தம் நூறு குறுங்கதைகள் தனித்தனியாய் ஆனால் அவற்றினிடையே ஓடும் மெல்லிய நூல் ஒன்று அவற்றை நாவல் என்ற கட்டுக்குள் கட்டிவிடுகிறது.யுவன் சந்திரசேகரின் பிரதி பிம்பமாய் கிருஷ்ணன் என்ற வங்கி ஊழியரின் வாழ்க்கை சம்பவங்களே நூறு குறுங்கதைகளும்.மதுரை நகர் முழுவதும் நகரும் கதை சென்னையிலும் முடிவற்று தொடர்கிறது. தொடர்ச்சியாய் இல்லாமல் முன்னும் பின்னும் சிதறுகின்றன குறுங்கதைகள். 

மிக குறைவான வாக்கியங்கள் கொண்டே படைக்கபட்டிருக்கின்றன அவ்வளவு குறுங்கதைகளும் ,சாதரணமாய் கடந்து போகும் சில கதைகள் கடைசி வரியில் நம்மை கட்டி போட்டு விடுகின்றன.யுவனின் பிரதிபிம்பமாய் வரும் கிருஷ்ணனே கதையின் நாயகன். ஒருவரை பல பேர் அடிக்கும் போது கண்டுகொள்ளாமல் போகும் கிருஷ்ணன்,கல்யாணத்தில் செருப்பு காணாமல் போக சம்பந்தமில்லாத அளவில் செருப்பை திருடிக்கொண்டு வந்துவிடும் கிருஷ்ணன்,ஒரு பெண்ணுக்கு வண்டியில் லிப்ட் கொடுத்ததும் தெரிந்து,தெரியாமல என்று புரியாமல் பல முறை பிரேக் போட்டு பெண்ணை தன் மேல் மோத செய்யும் கிருஷ்ணன் , இறந்து போன பூணையின் சடலத்தை தேடும் கிருஷ்ணன்,ஒரு பெண்ணின் கனவை தன் எழுத்தின் வழியே எழுத முயன்று தோற்று போகும் எழுத்தாளன் கிருஷ்ணன்,மன்னாரை எக்மோர் ரயில் நிலையத்தில் 5மணிக்கு  பார்த்து விட்டு வீடு வந்ததும் அவன் 5 மணிக்கு மதுரையில் இறந்த செய்தியை கேட்டு திகைக்காமல் நிற்கும் கிருஷ்ணன்,விவாகரத்து பெற ஊருக்கு செல்லும் கடைசி நாளில் கணவருடன் உடலுறவு கொள்ளும் பெண்,அந்த சமயத்தில் அங்கே தங்கியிருக்கு சமாதானம் சொல்ல வந்த கிருஷ்ணன்  என்று புத்தகம் முழுவதும் சாதரண,அசாதாரண கிருஷ்ணன்கள் சிதறி கிடக்கின்றனர்.

பாதி புத்தகம் படித்ததும் கடைசி பத்தியை படித்து முடித்து புத்தகத்தை நிறைவு செய்ய தேவையில்லாத புத்தகங்களில்,படித்து முடித்ததும் சில நாள் மனதை அரித்து கொண்டிருக்கும் நூல்களில் இதுவும் ஒன்று......இணையத்தில் வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-036-4.html


Tuesday, June 2, 2015

அன்று

இந்த சிறுகதை எழுத்தாளர் சரவண கார்த்திகேயனால் நடத்தப்படும் தமிழ் மின்னிதழில் மே மாதம் வெளியானது

______________________________________________

“என்ன தம்பி ஆபிஸ்லருந்து சீக்கிரம் கிளம்பிட்ட போல?”,


“உள்ள ஏறி வாங்க, இல்லாட்டி இறங்கிக்கோங்க”,


“சார், இந்த பேக கொஞ்சம் வச்சிக்க முடியுமா?”,


”இடிக்காம நில்லுப்பா”,


“பெருங்குடிலருந்து பஸ்ல வந்தினுருக்கேன் இன்னும் பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்”


“பல்லாவரம் போகுமா?”


மேற்கண்ட உரையாடலைலாம் பாத்ததும் இது ஒரு பேருந்து பயணம் சம்பந்தமான கதைன்னு நினைச்சிருப்பிங்க. அப்படித்தான் நானும் நினைச்சிருந்தேன் அவன் (இல்லை இல்லை இப்போதைக்கு அவர்),  அவர் வந்து எம்பக்கத்துல உக்காரும் வரை. இது வரைக்கும் படிச்சதிலிருந்து உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நான் தேவையில்லாம எதையும் சொல்ல மாட்டேன்னு அதானால அவர் எப்படி இருந்தார்னுலாம் சொல்லுவேன்னு எதிர்பார்க்காதீங்க.


சிவராஜ் வைத்திய பரம்பரைல எப்படி வரிசையா ஆம்பள பசங்களாவே பொறக்குறாங்கன்னு பயங்கரமா யோசிச்ட்ருக்கும்போது தான். “எங்கருந்து தம்பி வர்றீங்க” அவர்  குரல்,


“கந்தன் சாவடி சார்”,


சரி நாமளும் கேட்டு வைப்போம் “நீங்க எங்கிருந்து சார் வர்றீங்க?”,


“ஜெயில்ல இருந்து தம்பி”,


இங்க நான் அதிர்ச்சியடைஞ்சிருப்பேன்னு நீங்க நினைச்சிருப்பிங்க இல்ல எனக்கு இதெல்லாம் பழகிடிச்சி, சத்தியமா இந்த ஏரியாலா ஜெயிலே இல்ல, கண்டிப்பா இவரும் என்னை மாதிரி ஒரு ஐடி கம்பனிலருந்து தான் வந்திருக்கனும் அத தான் கிண்டலா சொல்றானாம்னு இதலாம இன்னும் சோக்குன்னு நினைச்சிட்ருக்காங்கன்னு நான்  நினைச்சிக்கிட்டேன். சரி எதாவது கேட்டு வைப்போம்.  


“ஏன் சார் ஜெயிலுக்கு போனிங்க?”


“ஒருத்தன கொல செஞ்சிட்டேன் அதான்”


(கொலகாரனா? ஒரு வேள நிஜமத்தான் ஜெயிலுக்கு போய்ட்டு வந்தேன்னு சொல்றாரோ?, இங்க இருந்து இனிமே அவர் இல்ல அவன் )


”எதுக்கு?””
கொடுத்த கடன திருப்பி கேட்டு ஒரே தொல்லை அதான்”.


“இப்போ யார சார் பாக்க போறீங்க?”


“தெரியலப்பா””ஏன் சார் வீட்லலாம் இல்லையா?”


”நான் ஜெயிலுக்கு போம்போது  பொண்ட்டியும் ,பையனும் இருந்தாங்கப்பா”


என்னது இருந்தாங்களா , அவங்களையும் இவரே எதாச்சும் செஞ்சிட்டாரா என யோசிப்பதற்குள் நடத்துனர் வந்துட்டார் டிக்கெட் கேட்க.


இந்த நேரத்துல எனக்கும், நடத்துனருக்கும் நடந்த உரையாடல் தேவையற்றது -


10 ரூபாயை நீட்டி “பெருங்களத்தூர் ஓண்ணு”


“3 ரூவா தாப்பா” “சில்லறை இல்லண்ணா”


”தம்பி டிக்கெட் 13 ரூபா”.


அவனே பேச ஆரம்பிச்சான்


“ஒரு தரம் என் பையன் பஸ்ல வந்திட்ருந்தான், அவன் பக்கத்துல உக்காந்திட்ருந்தவர் முகம் வேர்த்து போயிருக்க இவன் ஏன் சார்னு கேட்ருக்கான் , உன்ன பாத்தா நல்லவனா தெரியுது நான் ஒரு திருடன் தம்பி, கொஞ்சம் காசு திருடி பையில வச்சிருக்கேன் ,போலிஸ் துரத்துதுன்னு சொல்லிருக்கார் , கொஞ்ச நேரம் கழிச்சி தம்பி இந்த பணத்த கொஞ்ச நாள் வச்சிருக்க முடியுமா , நான் வந்து வாங்கிக்கிறேன் , கால்வாசி உனக்கு தர்றேன்னிருக்கார், இவனும் சரின்னு வாங்கிக்கிட்டான் , மறுநாளே வீட்ல ரத்தம் கக்கி செத்துட்டாம்ப்பா””


தாங்க முடியலடா சாமி இவன் பேசுறதுன்னு , பேருந்தோட சன்னல் வழியா எட்டி குதிச்சிடலாம் பார்த்தேன், பின்னாடி ஒருத்தன் அவன் பொண்டாட்டியோட (  இந்தாளு சொல்ற கதையே நம்புற நீங்க , அந்த வண்டிக்காரனோட வர்றது அவன் பொண்டாட்டி தான்னு நம்புவிங்கன்னு எனக்கு தெரியும் ) வண்டில வர்றத பாத்துட்டு முடிவ மாத்திக்கிட்டேன்.


அப்போ தான் அந்த சுவரொட்டியையும் பாத்தேன் ரேஷ்மாவின் “ரகசியம் ”, நேஷ்னல் திரையரங்குல போட்ருக்காங்க, போன வாரம் ரேஷ்மா நடிச்ச “இளமைக்கன்னி” போட்ருந்தாங்க , தொடர்ந்து ரேஷ்மா நடிச்ச படமாவே போடுறதோட காரணத்த கண்டுபிடிக்கனும்.


அவங்கம்மாக்கு என்னாச்சின்னு நான் கேக்கலைனாலும்,  இது அவரோட மனைவி பத்தின விசயம்ங்குறதால திரும்பவும் அவரே தான் சொல்ல ஆரம்பிச்சார்.  


”ஒரு நாள் என் பொண்டாட்டி பஸ்ல வந்திட்ருந்தா தம்பி, அவ பக்கத்துல ஒருத்தன் வந்து உட்கார்ந்தான், மாமண்டூர் ஓட்டல்ல பஸ் நிக்கும்போது அவன் ஒரு பைய என் பொண்டாட்டிக்கிட்ட கொடுத்து பாத்துக்கோங்க டீ சாப்பிட்டு வந்துடுறேன்னு சொன்னான், போனவன் திரும்ப வரவே இல்ல. என் பொண்டாட்டி பைய எடுத்துக்கிட்டு வந்துட்டா. அன்னைக்கு சாயந்தரமே அவ ரத்தம் கக்கி செத்துட்டாப்பா, அவன் யாருன்னு தெரியல ஆனா அந்த பஸ்ல கூட வந்தவனுங்க  ரெண்டு பேருக்கும் கழுத்துல சின்னதா ஒரு தழும்பு இருந்தது அத வச்சித்தான் என் பையன்,பொண்டாட்டி கூட உக்காந்து வந்தது ஒரே ஆள் தான்னு கண்டுபிடிச்சேன், இதுல ஆச்சர்யம் என்னன்னா நான் ஒருத்தன கொன்னேன்ல அவனுக்கும் அதே மாதிரி கழுத்துல சின்னதா ஒரு தழும்பு இருந்ததுப்பா”


இன்னும் கொஞ்சம் நேரம், இவன் பேசினா நாம தான் ரத்தம் கக்கி சாகனும்னு நினைக்கும்போது ஒரு சந்தேகம்,


ஆமா நீங்க தான் ஜெயில்ல இருந்திங்களே, இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்னு கேக்கலாம்னு வாயெடுக்குறேன்.


அவன் “தம்பி கீழ 100 ரூவா நோட்டு விழுந்து கிடக்குதே உங்களுதா பாருங்க”,


இந்திய பொருளாதாரத்த காப்பாத்துறதுக்காக 50 பைசா கீழ இருந்தாலே அத எடுத்து புழக்கத்துல விடுற எனக்கு அத என்னுதுன்னு சொல்லத்தான் வாய் வரும்னு தெரியாமலே கேக்குறான் லூசுப்பய, சரி அத மொதல்ல எடுத்துக்கிட்டு அப்புறம் நம்ம சந்தேகத்த கேப்போம்னு நினைச்சிக்கிட்டு குனிஞ்சி எடுத்துட்டு பாக்குறேன் அவன் பஸ்ஸ விட்டு இறங்கி போயிட்டே இருக்கான்.

இப்பத்தான் தோணுது. அவனுக்கும் கழுத்துல சின்னதா தழும்பு இருந்தா மாதிரித்தானிருக்கு …………...

Tuesday, March 31, 2015

அரசூர் வம்சம்

எந்த ஒரு இனத்துக்கும், சமூகத்திற்கும் மிகக்கடினமான விடயம் தங்கள் பண்பாடு , கலாச்சாரத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவது. இப்படி பாதுகாக்கவோ கடத்தவோ முடியாமல் அழிந்து போன இனம், மொழி பல. ஆனால் அப்படி தங்கள் கலச்சாரத்தை பாதுகாத்து கொள்ளும் இனங்கள் தனித்து நிற்கும். விமர்சனம் எத்தனையோ இருந்தாலும் யூதர்களை எனக்கு பிடிக்க முக்கிய காரணமே இது தான். யூத மதத்தில் மதம் மாறுதல் என்ற ஒன்றே இல்லை பிறப்பால் மட்டுமே யூத மதத்தினராய் இருக்க முடியும் அப்படி இருந்தும் அரசியல் நெருக்கடிகள், யூத மதத்திலிருந்து பிற மதத்திற்கு மதமாற்றங்கள், உலகம் முழுக்க எப்போதும் விரட்டியடிப்பு என பல துன்பங்களை சந்திக்க நேர்ந்தாலும் யூத பண்பாடு, கலாச்சாரம் என்ற ஒன்றை எப்போதும் அவர்கள் விட்டுக்கொடுத்ததேயில்லை. அதனால் தான் இன்று இஸ்ரேல் என்ற தனி நாடு அவர்களுக்கு கிட்டியது.

அரசூர் வம்சம் சுமார் 150-200 வருடம் முன்னர் நடக்கும் கதை. வாரிசில்லா, அதிகாரமில்லா ராஜாவும் , அவர் அரண்மனை அருகே வசிக்கும்  ராஜாவை விட வசதியான  புகையிலை விற்கும் பிராமணக்குடும்பமும் தான் கதைக்களம்.

இருத்தல் வேண்டி புகையிலை விற்கிறது பிராமணக்குடும்பம், தங்கள் தொழில் இதுவல்ல என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லாமல் இல்லை ஆனால் மிகச்சாதரணமாக கடந்து போகின்றனர். மெத்த படித்து சித்தம் கலங்கிய சாமி நாதன், கொட்டக்குடி தாசியின் நினைப்பில் திரியும் சங்கரன், வெள்ளைக்காரியுடன் உறவு கொள்ளும் பிராமணன், காசுக்கு உணவு விற்கும் பிராமணன், ஈமக்கிரியைகள் செய்வதே வாழ்க்கையாகிப்போனதே எனக்கலங்கும் பிராமணன், வேதமாவது ஒன்றாவது என படித்து முடித்து ஆங்கிலேயனிடம் வேலைக்கு செல்லும் பிராமணன், வட்டியில்லாமல் கடன் கிடைக்கிறதே என மதம் மாறும் பிராமணன்  என நாவல் முழுதும் பல்வேறு காரணிகளால் தங்கள் பண்பாட்டை காப்பாற்ற முடியாமல் சிதறுன்னுடு போகும் காலமாற்றத்தை புனைவின் வழியே சொல்கிறது நாவல்.

நாவலின் ஆரம்பத்தில் ராஜவைப்பற்றிய  வரிகளை படித்ததும் மனதில் விரிந்தது போருக்கு படை, பரிவாரத்தோடு போகும் கம்பீர ராஜ ஆனால் இந்த ராஜாவோ அதிகாரத்தையெல்லாம் ஆங்கிலேயர் பிடிங்கி கொள்ள, மிச்சமீதியாவாது காப்பாற்றிக்கொள்ள தனக்கு ஒரு வாரிசு வேண்டி கிடக்கும் ராஜா. தன் வேலையாட்களுக்கு கூட சம்பளம் தர முடியாமல் உள்ளுக்குள் புழுங்கி கிடக்கும் ராஜா.

இப்படி கனமான பாத்திரங்கள், கனமான நிகழ்வுகள் கொண்ட கதை சோகமாய் செல்கிறதா என்றால் இல்லை. அவர்களை கண்டு பரிதாபப்படுகிறாரா , பகடி செய்கிறாரா என தெரியாத எழுத்து. அவற்றை நம் விருப்பத்திற்கு விட்டு விடுகிறார் ஆசிரியர்.

சுவாரசியமான பாத்திரங்கள் பல

பனியன் சகோதரர்கள் - இந்நாவலை காலத்தின் குறுக்காய் காட்சிப்படுத்தும் இரண்டு பேர், மின்னணு பொருட்களை காண்பித்து காசு பார்க்கிறார்கள், அத்தனையும் அடகில் மூழ்கிப்போக காலம் அவர்களை இறந்த காலத்திலையே நிறுத்தி வைக்கிறது.

கிட்டவய்யன் - எதோ ஒரு பிராமணன் கிறிஸ்தியனுடன் சம்பந்தம் வைத்தான் என்பதால் ஒரு வம்சத்தையே ஒதுக்கி வைக்கின்றனர். அதில் ஒருவன் உணவு கேட்டு வரும்போது எட்டி உதைக்கிறார் கிட்டவய்யன். முடிவில் உணவுக்கடை வைக்க வட்டி இல்லாமல் கடன் கிடைக்கிறது என்பதற்காக கிறிஸ்தியனாக மாறுகிறார்.

முன்னோர்கள் - கதை மாந்தரிடம் ,அவ்வப்போது முன்னோர்கள் வந்து அறிவுரைகளையும், தங்கள் தேவைகளையும் சொல்லுகின்றனர் முக்கியமாய் ராஜாவிடமும். முன்னோர்கள் எனும் பாத்திரங்களை நான் மாந்தர்களின்  மனசாட்சி என எடுத்துக்கொண்டேன். இப்படி பலர்.

தீவிர வாசிப்பில் இருக்கும் ஒருவருக்கு அரசூர் வம்சம் நல்ல வாசிப்பனுவத்தை கொடுக்கும், புதுதாய் படிப்பவர்கள் மொழி நடையில் சற்று தடுமாறிப்போனாலும் சுதாரித்துக்கொள்ளலாம்.

460 பக்க நாவல், முதல் சில அத்தியாயம் படிக்க நேரம் எடுத்தாலும் அடுத்து நாவல் நம்மை உள்வாங்கி கொண்டது. நாவலின் காலத்தை போல் பக்கங்களும் பறக்க தொடங்கிவிட்டன.


அரசூர் வம்சம், இரா.முருகன்

விலை : ரூ.175

பக்கங்கள் : 464

இணையத்தில் வாங்க: http://nhm.in/printedbook/103/Arasur%20Vamsam

Monday, March 2, 2015

நகரம்

எப்போதும்
பயணிகளோடு
என் ஏக்கத்தையும் நிரப்பி
செல்கிறது
குளிர்சாதான பேருந்து,

என் இயலாமையை
உள்ளிழுத்துக்கொண்டு
சிரிக்கிறது
வணிகவளாகத்தின் விலை அட்டை,

ஏளனமாய்த்தான்
தோன்றுகிறது
உணவகத்தின் கண்ணாடி சுவருக்குள்
யுவதியின் விழிகள்,

சிநேகம் பாவிக்க
மறுக்கின்றன
எனது காலணியோடு
வழுக்கு தரைகள்,

பெரும்பாலும்
வாட்ச்மேனோடே
முடிந்து விடுகின்றன
எனது நேர்முகத்தேர்வுகள்,

ஆனாலும் இந்நகரம்
எனக்கும் வைத்திருக்கிறது
பத்து ரூபாய்க்கு இரண்டு தோசையும்
இராசனாய் நகர்வலம் வர
ஐம்பது ரூபாய் டிக்கெட்டும் ...

Friday, February 27, 2015

குளிர்பெட்டி

என்னைக்காவது குளிர்சாதனப்பெட்டிக்குள்ள (இதுக்கப்புறம் இந்தக்கதைல இத குளிர்பெட்டின்னு சொல்லிக்குவோம்) எட்டி பாத்திருக்கிங்களா?, ம்ம் பாத்திருக்கேனேன்னு சொல்லக்கூடாது. நான் கேக்குறது குளிர்பெட்டி சாத்தி  இருக்கும்போது பார்த்திருக்கிங்களான்னு. சாத்தி இருக்கும்போது எப்படி பாக்க முடியும்னு கேக்க கூடாது. அங்க தான் விசயம் இருக்கு உள்ளுக்குள்ள இருக்க காய்கறி , சாக்லேட்லாம் ஒண்ணோட ஒண்ணு பேசிக்கிட்ருக்கு. இல்ல வித்தியாசமா பாக்காதீங்க. லூசு இல்ல. உண்மையாத்தான் சொல்றேன்.

நான் ஒரு தரம் கூட பார்த்ததில்லையேன்னு யோசிக்காதீங்க. நானும் பார்த்ததில்ல என்ன நடக்குதுன்னா நாம குளிர்பெட்டியோட கதவ திறக்கும்போதோ இல்ல அப்படி யோசிச்ச உடனேயோ அதுங்கள்லாம் நாம எப்படி பாக்குறோமோ அப்படி ஆகிடுதுங்க. இப்போ அடுத்த கேள்வி உனக்கெப்படி தெரியும்?. சொல்றேன் நான் ஒரு நாள் கத்திரிக்காய் வேடம் போட்டுட்ருந்தேன். இது கதைங்குறதால ஏன் கத்திரிக்காய் வேடம் போட்டேன்னுலாம் சொல்லுவேன்னு எதிர்பார்க்ககூடாது.

எங்கம்மா சமையக்கட்டுல இருந்து இன்னும் குளிர்பெட்டிக்குள்ள வைக்காதது அரிசி மூட்டைய மட்டுந்தான். அப்படி ஒரு ஆள் சும்மாருப்பாங்களா , கத்திரிக்காய பார்த்ததும் அய்யோ கெட்டுபோயிடக்கூடாதுன்னு டக்குன்னு தூக்கி குளிர்பெட்டி அலமாரில வச்சிட்டாங்க,  மயக்கம் தெளிஞ்சி (நான் எப்போ மயக்கம் போட்டேன்னு கதைய உன்னிப்பா படிக்கிறவங்க கவனிச்சிருப்பிங்க) நான் எழுந்ததும் செம குளிரு. அப்படியே அரைக்கண்ண திறந்து பாக்குறேன். எல்லா காய்க்கும் கண்ணு முளைச்சிருக்கு அது மட்டுமில்லாம அதுலாம் என்னையே பார்த்துட்டுருக்கு. மறுபடி மயக்கம் போட்டேன் மறுபடி மயக்கம் தெளிஞ்சிடிச்சி. இப்போ கண்ண திறக்காம அப்படியே பயத்துல நடுங்கிட்ருந்தேன் பாக்குறவங்களுக்கு நான் குளிர்ல நடுங்குற மாதிரி தான் தெரியும் ஆனா உண்மைலையே செம பயம் இதுங்கள்லாம் சேர்ந்து என்னை திண்ணுட்டா?. முன்னாடி அதுங்களுக்கு கை,கால்,வாய்லாம் இருக்கும்னு தெரியாது பயந்ததில்லை இப்போ பயமாருக்கு.

நடுங்கிட்ருக்கும்போது அதுங்கள்லாம் பேசுறத கேட்டேன். என்னன்னு பேசுச்சிங்கன்னு கேக்காதீங்க. 10வது படிக்கும்போது எல்லா பாடத்திலையும் 90க்கு மேல இங்கிலிஸ்ல மட்டும் 76. ஆக அதுங்கள்லாம்  இங்கிலிசுல பேசிச்சான்னு யோசிக்கவும் கூடாது. எனக்கு தமிழ் தவிர வேற எதும் புரியாதுங்குறது தான். இந்த பத்தியோட சாராம்சம்.

எவ்ளோ நேரம் தான் அப்படி உக்காந்திட்ருக்குறது. குளிர், பயமா வேற இருக்கு. சரின்னு கதவ திறக்குற மாதிரி மனசுல நினைச்சிக்கிட்டேன். அவ்ளோ தான் எல்லா பொருளும் நாம எப்படி பாக்குறோமோ அப்படி மாறிடிச்சிங்க. ஆனா என்னால வெளிய போக முடியாது ஏன்னு சொல்லுங்க ஏன்னா நான் தான் கத்திரிக்காய மாறி இருக்கேனே. அம்மா வர்ற வரை இப்படியே காத்திருக்க வேண்டியது தான்.

அடுத்த முறை குளிர்பெட்டிய திறந்தா எதாவது ஒரு பொருள் நீங்க வெச்ச இடத்த விட்டு கொஞ்சமே கொஞ்சம் நகர்ந்திருக்கும் பாருங்க.

Wednesday, December 26, 2012

வேலுவின் நீதிக்கதைகள் -2


வேலுவின் நீதிக்கதைகள் பற்றி அறியாதவர்களுக்கு வேலுவின் நீதிக்கதைகள் -1

வேலுவே எழுதிய நீதிக்கதை :
ஒரு காட்டுல ஒரு பாட்டி வடை சுட்டு வித்துட்டு இருந்தாளாம். காட்டு மிருகமெல்லாம் அங்க வந்து வடை வாங்கி சாப்பிட்டு போகுமாம்.அந்த காட்டுல ஒரு காக்காவும் இருந்துச்சாம். அதுக்கு வடை சாப்பிடனும்னு ரொம்ப நாள் ஆசையாம். ஆனா பாவம் அது கிட்ட வடை வாங்க காசே இல்லையாம். என்ன பண்ணலாம்னு சோகமா யோசிச்சிட்டு இருக்கும் போது ஆமை வந்து என்ன பிரச்சனை ஏன் சோகமா இருக்கேன்னு கேட்டுச்சாம். காக்காவும் வடைய பத்தி சொல்லுச்சாம். ஆமை, நீ பாட்டி அசந்த நேரம் பார்த்து வடைய தூக்கிட்டு வந்துடுன்னுச்சாம்.

ரெண்டு நாள் கழிச்சி ஆமை வந்துச்சாம் என்ன ஆச்சு வடையை தூக்கிட்டியான்னு கேட்டுச்சாம். அட நீ வேற விடப்பான்னுச்சாம். ஏம்ப்பா என்ன ஆச்சுன்னுச்சாம் ஆமை. நான் வடைய தூக்க போகும் போதெல்லாம் மாட்டிக்கிறேன் எனக்கு லாங்க் சைட் வேறையா கிட்ட போகும் போது எது வடை சட்டி எது எண்ணெய் சட்டின்னே தெரிய மாட்டேங்குது. ஒண்ணு பாட்டிக்கிட்ட மாட்டிக்கிறேன் இல்லைன்னா எண்ணெய் சட்டில சூடு வச்சிக்கிறேன் அப்படின்னுச்சாம் காக்கா.
சரி ஒண்ணு பண்ணுவோம் என்னை தூக்கிட்டு நீ பற எனக்கு தான் கண்ணு நல்லா தெரியுமே நான் வடைய திருடுறேன். ரெண்டு பேரும் ஆளுக்கு பாதியா வடைய ஷேர் பண்ணிப்போம்னுச்சாம் ஆமை. காக்காவும் ஒகேன்னு சந்தோஷமா சொல்லிச்சாம்.

அடுத்த நாள் ஆமைய தூக்கிட்டு காக்காவும் வடையை திருட போச்சாம். வடை சட்டிக்கு கிட்ட போகும் போது வெயிட் தாங்காம ஆமையை கீழ போட்டுடுச்சாம். ஆமை பாட்டி வச்சிருந்த மாவு சட்டிக்குள்ள விழுந்துடுச்சாம். பாட்டிக்கும் லாங்க் சைட்டாம் சோ பாட்டி ஆமை விழுந்தத கவனிக்காம ஆமைய மாவுல பொரட்டி அப்படியே எண்ணெய் சட்டிக்குள்ள போட்டுட்டாங்களாம். 

நீதி:அப்போ கண்டுபிடிச்சது தான் ஆமை வடை  

காட்டுக்குள்ளே பயங்கரம்... வேலுவும் அவனோட ஃபிரெண்டும் சேர்ந்து ஒரு நாள் போரடிக்குதுன்னு காட்டுக்கு ட்ரெக்கிங் போனாங்களாம். காட்டுக்குள்ள ரொம்ப தூரம் வேடிக்கை பார்த்துட்டே போயிட்டு இருந்தாங்களாம். ஒரு இடத்தில குளம் ஒண்ணு இருந்துச்சாம். அதுல இறங்கி குளிக்க போனாங்களாம். கால தண்ணில வைக்க போகும் போது சிறுத்தையோட சத்தம் கேட்டுச்சாம். திரும்பி பார்த்தா நிஜாமாவே சிறுத்தை நின்னுட்டு இருந்துச்சாம். அதுவும் தண்ணி குடிக்க வந்திருக்கும் போல. வேலுவும் அவன் பிரெண்டும் அத பார்த்துட்டு பயந்து ஓடினாங்களாம். ஓடும் போது வேலு, “மச்சி சிறுத்தை கிட்ட எல்லாம் ஓடி தப்பிக்க முடியாது நாம எதாவது மரத்து மேல ஏறிக்கலாம்“னு அவன் பிரெண்டுகிட்ட சொல்லிட்டு குடுகுடுன்னு போய் ஒரு மரத்துல ஏறிக்கிட்டானாம். அவன் பிரெண்டும் பின்னாடியே வந்து மரத்துல ஏறினானாம். துரத்திட்டு வந்த சிறுத்தை பொறுமையா மரத்து மேல ஏறி வந்து கிட்ட இருந்த வேலுவோட பிரெண்ட சாகடிச்சி துக்கிட்டு  போயிடிச்சாம்.........


நீதி :சிறுத்தைக்கு மரம் ஏற தெரியும்......

Saturday, December 1, 2012

தூங்குதலின் குறிப்புகள்....

குப்புறபடுத்தலின் குறிப்புகள்....

 • மல்லாkக படுத்து யோசிப்பதை விட குப்புற படுத்து யோசித்தால் சிந்தனை எளிதில் வசப்படும்
 • மல்லாக்க படுப்பதென்பது மனிதனுக்கு மட்டுமே உரியது என்பதால் இயற்கையோடு இணைய குப்புறபடுப்பதே சிறந்ததென்பது என் எண்ணம்..
 • தொப்பை கரைய குப்புறபடுக்கலாம் என்பது புத்திசாலி சோம்பேறிகளின் உடற்பயிற்சி சிந்தனைகளில் ஒன்று...
 • இரவில் தூங்கும்போது நமக்குச் சிறகு முளைத்தால் குப்புறபடுத்தவன் அப்படியே பறந்துவிடலாம் மல்லாக்கப்படுத்தவன் புரண்டு பறக்க வேண்டும்..
 • குழந்தையாய் இருக்கும்போது தானே புரண்டு குப்புறப்படுப்பதே நாம் தவழ,நடக்க எடுக்கும் முதல் முயற்சி....
 • எதிர்காலத்தில் நின்றுகொண்டே தூங்குமாறு பரிணாம குழப்பம் ஏற்படலாம் என்றால் இப்போதே குப்புறபடுத்தி பழக்கபடுத்தி கொள்ளுதலே நல்லது
 • மின்சாரம் இல்லாத நேரத்தில் மல்லாக்க படுத்து ஓடாத மின் விசிறியை பார்த்து ஆட்கொணா துயரில் ஆழ்வதற்கு குப்புறபடுத்தலே மேல்..
மல்லாக்கப்படுத்தலின் குறிப்புகள்....

 • மல்லாக்கப் படுத்தல் மனித இனத்திற்கு மட்டுமே உரிய பகுத்தறிவு குணங்களில் ஒன்று...
 • மல்லாக்கப் படுத்து கொஞ்ச நேரமே ஓடும் மின் விசிறியை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பது தமிழ் நாட்டின் தற்கால தியான முறைகளில் ஒன்று..
 • ஏஞ்சலோவின் ஓவியங்களில் பல உருவங்கள் மல்லாக்க படுத்து கொண்டிருப்பதிலிருந்து இது ஆதி கால பழக்கம் என்பதை அறியலாம்..
 • பெரும்பாலும் திரைப்படங்களில் தூங்கி எழும் காட்சியில் மல்லாக்க படுத்திருந்து எழுவதிலிருந்து இது நாகரீக பழக்கம் என்பதையும் அறியலாம்.
 • பெரும்பாலும் புத்தகங்கள் மல்லாக்க படுத்துக் கொண்டுத்தான் படிக்கபடுகிறது என்பதால் இது கல்வி வளர்ச்சியின் தூண்டுகோலாகவும் அமைகிறது..
 • தூக்கத்திலிருந்து எழுந்திருக்க வேண்டி வந்தால் மல்லாக்க படுத்திருப்பவன் அப்படியே எழலாம் குப்புறபடுத்திருப்பவன் புரண்டு எழ வேண்டும்....

Tuesday, October 2, 2012

ஆறு கால் பிராணி
கால்களின் ஓரத்தில் ஆறு கால் பிராணி ஒன்று இடது காலின் பக்கத்தில் இருந்த எனது வலது காலை உராசிக்கொண்டு சென்றது.பிரமையா இருக்கும்னு விட்டுட்டேன் பிரமையா தான் இருக்கனும்.

முன்பு ஒரு நாள் கனவில் நாலு கால் பிராணி ஒன்று துள்ளிகுதித்து ஓடியது, 
நான் அதை முயல் அல்லது நாய் என்று சந்தேகப்பட்டேன் இப்போது தான் தோன்றுகிறது தூக்கத்தில் சரியாக கவனிக்காமல் விட்ருக்கலாம் அதற்கு ஆறு கால்கள் இருந்திருக்குமோ ???

அந்த ஆறுகால் பிராணியை பிடிக்காமல் விட்டதற்கு இன்னோரு காரணமும் உண்டு. பொதுவாக ஆறு கால் பிராணிகளுக்கு எந்த வகை உணவு அளிப்பது என எந்த புத்தகத்திலும் இல்லை.நான் ஒரு வேளை அதை பிடிக்கும் வேலை அது உணவு அருந்தும் வேளையாக இருந்தால் வேறு எந்த உணவும் கிடைக்காமல் நம்மை உண்டு விடும் சாத்தியகூறுகளும் உண்டு.

ஆறுகால் பிராணிகளின் வேகம் பற்றி முன்னமே நான் ஒரு ரகசிய புத்தகத்தில் படித்தது உண்டு. அவை வாயு வேகம் மனோவேகம் போன்ற வேகங்களில் செல்லாமல் சாதாரண நாலு கால் பிராணிகளின் வேகத்திலேயே செல்லுமென ஆனால் இந்த ஆறுகால் பிராணி நான் பார்த்து பிடிக்காலாமா என யோசனை செய்யும் முன்பே ஓடி விட்டது .இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது ஆறுகால் பிராணிகள் யோசனை வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும். அந்த புத்தகத்தை உடனடியாக திருத்த வேண்டும்.

இந்த சமயத்தில் திடீரெனெ ஒரு சந்தேகம் வந்தது ஆறு கால் பிராணிகளுக்கு படிப்பறிவு இருக்குமா என்று இந்த சந்தேகம் பார்த்து என்னை முட்டாள் என நினைக்க வேண்டாம். பொதுவாக இரண்டு கால் பிராணியான நமக்கு படிப்பறிவு உண்டு ஆனால் பலமில்லை ஆனால் நான்கு கால் பிராணிகளுக்கு பலமுண்டு படிப்பறிவு இல்லை 4+2=6 என்று நான் 2ம் வகுப்பில் படித்ததன் விளைவாக ஆறு கால் பிராணிகளுக்கு பலம்,படிப்பறிவு இரண்டும் இருக்கும் என நினைத்திருந்தேன் ஆனால் ஆறுகால் பிராணிகள் எந்த பள்ளியிலும் படித்து நான் பார்த்ததில்லை எனவே தான் அந்த சந்தேகம் வந்தது.

அந்த ஆறுகால் பிராணி பற்றி நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன் கூகுளில் சென்னையில் மன நல மருத்துவர்கள் இருக்குமிடங்கள் பற்றி தேடிக்கொண்டிருந்தான்.ஆறுகால் பிராணி பற்றி தெரிந்த ஒரே ஒரு இரண்டு கால் பிராணியும் அதை பற்றிய செய்தியை உலகிற்கு தெரிவிக்காமல் போக போகிறது..............

Tuesday, July 24, 2012

நம்பிமந்திரியரே உங்களுக்கே தெரியும் இந்த நாட்டின் மானம்,மரியாதை இது வரை என் பரம்பரை கட்டிக்காத்த கவுரவம் எல்லாம் இப்போது உங்கள் கைகளில். நீங்கள் எடுக்கும் முடிவு எனக்கு,உங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டின் மன்னன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் லட்சோப லட்சம் மக்களுக்கும நன்மை பயக்க போகும் முடிவு ஆனால் இது வரை அந்த முடிவை பற்றி எதுவுமே சொல்லவில்லை நீங்கள். குறைந்தபட்சம் அதை பற்றிய ஆலோசனை கூட கேட்கவில்லை.மனதில் பட்டதை சொல்லுங்கள் நீங்கள் ஒருவர் மட்டும் மந்திரியில்ல மற்ற மந்திரிகளையும் ஆலோசிக்க வேண்டும்.உங்களையே நம்பி இருக்கிறேன் விரைவில் உங்கள் முடிவை சொல்லுங்கள்.


என்ன சார் இது கவர்மென்ட் ஆபிஸ்ல வேலைக்கு சேந்துட்டா எந்த வேலையும் பண்ண வேண்டாம்னு நினைச்சிட்டிங்களா? எனக்கு மேலையும் ஒரு ஆபிசர் இருக்காரு.அவருக்கு நான் பதில் சொல்லியாகனும் ஒரு வேலையை முடிக்க சொல்லி ஒரு வாரமாச்சி.இது வரைக்கும் ஒரு ஸ்டெப்பாவது எடுத்திருப்பிங்களா? என்னவோ ஆபிசே உங்கள நம்பி தான் இருக்கா மாதிரி வேலை செய்யுறிங்க.நிங்க இல்லைன்னாலும்  ஆபிஸ் நடக்கும் புரிஞ்சதா ?.என்ன பண்ணுவிங்களோ நாளைக்கு அந்த வேலைய முடிச்சிருக்கணும்.

வொர்க் பண்ண இஷ்டமில்லைன்ன புராஜெக்ட் ஆரம்பிக்கும் போதே  மாட்டேன்னு சொல்லி இருக்கணும். இப்போ புராஜக்ட் முடியுற சமயத்துல வந்து இன்னும் ஸ்டார்டிங் ஸ்டேஜ்லையே இருக்கேன்னு சொன்னா என்ன பண்றது.நீங்க எனக்கு மட்டும் தான் பதில் சொல்றிங்க.நான் புராஜக்ட் லீடர் ,மேனேஜர்.கிளையன்ட் எல்லாருக்கு பதில் சொல்லனும் இது தேவையா எனக்கு. என்னால ஒன்னும் பண்ண முடியாது இன்னும் ஒரு வாரத்துல உங்க மாட்யூல் கம்ப்ளிட் ஆகி இருக்கனும் நிங்க 24 மணி நேரம் வொர்க் பன்னாலும் எனக்கு ஒகே தான்.அண்டர்ஸ்டாண்ட் ஒன்  திங் கம்பனி உங்கள நம்பி மட்டுமே இல்லை.

இவ பெட் ரூமுக்கு காபி எடுத்து வந்து திட்டிக்கிட்டே கொடுக்குறதுக்கு பதில் நாமேளே ஹாலுக்கு போய் குடிச்சிடலாம்."ம்ம்க்கும் நல்ல நாள்லயே ஒரு வேலை செய்ய மாட்டார் இந்த லட்சணத்துல வேலைக்கு வேற கிளம்புறார் கிட்ட வருவாரா " "நாமளே  குழந்தைய எழுப்பி ஸ்கூலுக்கு அனுப்பிட்டு இவருக்கு வேற சமைக்கணும் ஒரு ஒத்தாசை உண்டா " "நான் வாங்கி வந்த வரம் அப்படி" "நமக்கு உதவி செய்ய வேண்டாம் இவரோட வேலையாவது செய்யலாம்ல " "காலைலயே எதுக்கு இப்போ கத்திட்டு இருக்க ?" "போன வரமே  உங்கள கரெண்ட் பில் கட்ட சொன்னேன்ல இப்போ கடைசி நாளும் முடிஞ்சிடிச்சி இப்போ பைன் போட்டு கட்டனும் உங்கள நம்பி ஒரு வேலை சொன்னதுக்கு இது தான் நிலைமை" 

கனவுகளுக்கான காரணம் புரிய ஆரம்பித்தது எனக்கு ........