Thursday, October 12, 2017

மணற்கேணி

ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
விலை : Rs.180
பக்கங்கள் : 312
யுவன் சந்திரசேகர் தமிழின் தற்கால  பின் நவீனத்துவ கவிஞர்,எழுத்தாளர் அவர் எழுதிய மணற்கேணி .நூலகத்தில் எதேச்சையாகத்தான் படிக்க கிடைத்தது.பொதுவாக புத்தகங்களை மிக வேகமாக படித்து முடித்து விடும் என்னால் இந்த புத்தகத்தை முடிக்க ஒரு மாத காலம் பிடித்தது.எளிதில் கடந்து போய் விட முடியாத புத்தகம்.எனக்குள் முதல் முறையாக படித்ததும் பிரமிப்பை ஏற்படுத்தியவர்கள் இருவர் ஒருவர் சாரு நிவேதிதா மற்றுமொருவர் யுவன் சந்திர சேகரே.

மொத்தம் நூறு குறுங்கதைகள் தனித்தனியாய் ஆனால் அவற்றினிடையே ஓடும் மெல்லிய நூல் ஒன்று அவற்றை நாவல் என்ற கட்டுக்குள் கட்டிவிடுகிறது.யுவன் சந்திரசேகரின் பிரதி பிம்பமாய் கிருஷ்ணன் என்ற வங்கி ஊழியரின் வாழ்க்கை சம்பவங்களே நூறு குறுங்கதைகளும்.மதுரை நகர் முழுவதும் நகரும் கதை சென்னையிலும் முடிவற்று தொடர்கிறது. தொடர்ச்சியாய் இல்லாமல் முன்னும் பின்னும் சிதறுகின்றன குறுங்கதைகள். 

மிக குறைவான வாக்கியங்கள் கொண்டே படைக்கபட்டிருக்கின்றன அவ்வளவு குறுங்கதைகளும் ,சாதரணமாய் கடந்து போகும் சில கதைகள் கடைசி வரியில் நம்மை கட்டி போட்டு விடுகின்றன.யுவனின் பிரதிபிம்பமாய் வரும் கிருஷ்ணனே கதையின் நாயகன். ஒருவரை பல பேர் அடிக்கும் போது கண்டுகொள்ளாமல் போகும் கிருஷ்ணன்,கல்யாணத்தில் செருப்பு காணாமல் போக சம்பந்தமில்லாத அளவில் செருப்பை திருடிக்கொண்டு வந்துவிடும் கிருஷ்ணன்,ஒரு பெண்ணுக்கு வண்டியில் லிப்ட் கொடுத்ததும் தெரிந்து,தெரியாமல என்று புரியாமல் பல முறை பிரேக் போட்டு பெண்ணை தன் மேல் மோத செய்யும் கிருஷ்ணன் , இறந்து போன பூணையின் சடலத்தை தேடும் கிருஷ்ணன்,ஒரு பெண்ணின் கனவை தன் எழுத்தின் வழியே எழுத முயன்று தோற்று போகும் எழுத்தாளன் கிருஷ்ணன்,மன்னாரை எக்மோர் ரயில் நிலையத்தில் 5மணிக்கு  பார்த்து விட்டு வீடு வந்ததும் அவன் 5 மணிக்கு மதுரையில் இறந்த செய்தியை கேட்டு திகைக்காமல் நிற்கும் கிருஷ்ணன்,விவாகரத்து பெற ஊருக்கு செல்லும் கடைசி நாளில் கணவருடன் உடலுறவு கொள்ளும் பெண்,அந்த சமயத்தில் அங்கே தங்கியிருக்கு சமாதானம் சொல்ல வந்த கிருஷ்ணன்  என்று புத்தகம் முழுவதும் சாதரண,அசாதாரண கிருஷ்ணன்கள் சிதறி கிடக்கின்றனர்.

பாதி புத்தகம் படித்ததும் கடைசி பத்தியை படித்து முடித்து புத்தகத்தை நிறைவு செய்ய தேவையில்லாத புத்தகங்களில்,படித்து முடித்ததும் சில நாள் மனதை அரித்து கொண்டிருக்கும் நூல்களில் இதுவும் ஒன்று......



இணையத்தில் வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-036-4.html