Thursday, September 30, 2010

தேசிய திரைப்பட விருது

2009ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது (57வது தேசிய விருது) பெறும் படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் பட்டியலை விருது குழுத்தலைவர் ரமேஷ் சிப்பி அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:

சிறந்த படம் : குட்டி ஷ்ரங் (மம்முட்டி நடித்த மலையாள படம்). இந்த படத்தை தயாரித்த ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும், படத்தின் டைரக்டர் ஷாஜி என்.கருணுக்கும் தலா இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் தங்கத்தாமரை விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த நடிகர் : அமிதாப் பச்சன் (பா என்ற இந்திப்படத்துக்காக இந்த விருது வழங்கப்படுகிறது). அமிதாப்புக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் வெள்ளித்தாமரை விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த தமிழ்ப்படம் : பசங்க. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமாருக்கும், டைரக்டர் பாண்டிராஜூக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசும் வெள்ளித்தாமரை விருதும் வழங்கப்பட உள்ளது.

சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் : ஜீவன், அன்பரசு (இவர்கள் இருவரும் பசங்க படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள்) . இவர்களுக்கு அகில இந்திய அளவில் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான வெள்ளித்தாமரை விருதும், தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

சிறந்த வசனகர்த்தா : டைரக்டர் பாண்டிராஜ் (பசங்க படத்துக்காக வழங்கப்படுகிறது). இவருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் பரிசாக கிடைக்கும்.

சிறந்த பொழுதுபோக்கு படம் : 3 இடியட்ஸ். இதன் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் தலா ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்படும்.

சிறந்த ரீ ரெக்கார்டிங் : 3 இடியட்ஸ்

சிறந்த பாடல் : 3 இடியங்ஸ்

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த படம் : டெல்லி 6. (இப்படத்துக்கு நர்கீஸ் தத் விருது கிடைக்கும்). இதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு தலா ரூ.ஒன்றரை லட்சம ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்பட உள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் : இளையராஜா (பழசிராஜா என்ற மலையாள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது). இவருக்கு ‌ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் வெள்ளித்தாமரை வழங்கப்படும்.

சிறப்பு விருது : நடிகை பத்மப்ரியா (இவர் பல படங்களில் சிறப்பா நடித்ததற்காக இந்த விருது பெறுகிறார்). இவருக்கு சிறப்பு விருதுக்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

தேசிய சிறந்த படம் : வெல்டன் அப்பா - இந்திப்படம் (சமூக பிரச்னைகளை விளக்கும் தேசிய சிறந்த படத்துக்கான விருது இப்படத்திற்கு வழங்கப்படுகிறது) இதன் தயாரிப்பாளர், இயக்குனருக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் வெள்ளித்தாமரை வழங்கப்படும்.

சிறந்த குழந்தைகள் படம் : புட்டானி பார்லி (கன்னடப்படம்) இதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.ஒன்றரை லட்சமும், வெள்ளித்தாமரையும் பரிசாக வழங்கப்படும்.

சிறந்த இயக்குனர் : ரீதுபர்னோ கோஷ் (அபோகோமன் என்ற வங்காளப்படத்தை இயக்கியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது). இவருக்கு ரூ.இரண்டரை லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் தங்கத்தாமரை விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த நடிகை : அனன்யா சாட்டர்ஜி (அபோகோமன் என்ற வங்காளப்படம்) இவருக்கு இவருக்கு வெள்ளித் தாமரையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

சிறந்த பின்னணி பாடகர் : இஸ்லாம் (மகாநகர் அட் கொல்கத்தா என்ற வங்காள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது) இவருக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்படும்.

சிறந்த பின்னணி பாடகி : நீலாஞ்சவா சர்க்கார் (ஹவுஸ் புல் என்ற வங்காள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது) இவருக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், வெள்ளித்தாமரையும் வழங்கப்படும்.

சிறந்த ஒலிப்பதிவாளர் : ரசூல் பூக்குட்டி (குட்டி ஷரங்க் என்ற மலையாள படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது). இவர் ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏற்கனவே ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, August 10, 2010

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள். மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்?