Tuesday, July 24, 2012

நம்பி



மந்திரியரே உங்களுக்கே தெரியும் இந்த நாட்டின் மானம்,மரியாதை இது வரை என் பரம்பரை கட்டிக்காத்த கவுரவம் எல்லாம் இப்போது உங்கள் கைகளில். நீங்கள் எடுக்கும் முடிவு எனக்கு,உங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டின் மன்னன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் லட்சோப லட்சம் மக்களுக்கும நன்மை பயக்க போகும் முடிவு ஆனால் இது வரை அந்த முடிவை பற்றி எதுவுமே சொல்லவில்லை நீங்கள். குறைந்தபட்சம் அதை பற்றிய ஆலோசனை கூட கேட்கவில்லை.மனதில் பட்டதை சொல்லுங்கள் நீங்கள் ஒருவர் மட்டும் மந்திரியில்ல மற்ற மந்திரிகளையும் ஆலோசிக்க வேண்டும்.உங்களையே நம்பி இருக்கிறேன் விரைவில் உங்கள் முடிவை சொல்லுங்கள்.


என்ன சார் இது கவர்மென்ட் ஆபிஸ்ல வேலைக்கு சேந்துட்டா எந்த வேலையும் பண்ண வேண்டாம்னு நினைச்சிட்டிங்களா? எனக்கு மேலையும் ஒரு ஆபிசர் இருக்காரு.அவருக்கு நான் பதில் சொல்லியாகனும் ஒரு வேலையை முடிக்க சொல்லி ஒரு வாரமாச்சி.இது வரைக்கும் ஒரு ஸ்டெப்பாவது எடுத்திருப்பிங்களா? என்னவோ ஆபிசே உங்கள நம்பி தான் இருக்கா மாதிரி வேலை செய்யுறிங்க.நிங்க இல்லைன்னாலும்  ஆபிஸ் நடக்கும் புரிஞ்சதா ?.என்ன பண்ணுவிங்களோ நாளைக்கு அந்த வேலைய முடிச்சிருக்கணும்.

வொர்க் பண்ண இஷ்டமில்லைன்ன புராஜெக்ட் ஆரம்பிக்கும் போதே  மாட்டேன்னு சொல்லி இருக்கணும். இப்போ புராஜக்ட் முடியுற சமயத்துல வந்து இன்னும் ஸ்டார்டிங் ஸ்டேஜ்லையே இருக்கேன்னு சொன்னா என்ன பண்றது.நீங்க எனக்கு மட்டும் தான் பதில் சொல்றிங்க.நான் புராஜக்ட் லீடர் ,மேனேஜர்.கிளையன்ட் எல்லாருக்கு பதில் சொல்லனும் இது தேவையா எனக்கு. என்னால ஒன்னும் பண்ண முடியாது இன்னும் ஒரு வாரத்துல உங்க மாட்யூல் கம்ப்ளிட் ஆகி இருக்கனும் நிங்க 24 மணி நேரம் வொர்க் பன்னாலும் எனக்கு ஒகே தான்.அண்டர்ஸ்டாண்ட் ஒன்  திங் கம்பனி உங்கள நம்பி மட்டுமே இல்லை.

இவ பெட் ரூமுக்கு காபி எடுத்து வந்து திட்டிக்கிட்டே கொடுக்குறதுக்கு பதில் நாமேளே ஹாலுக்கு போய் குடிச்சிடலாம்."ம்ம்க்கும் நல்ல நாள்லயே ஒரு வேலை செய்ய மாட்டார் இந்த லட்சணத்துல வேலைக்கு வேற கிளம்புறார் கிட்ட வருவாரா " "நாமளே  குழந்தைய எழுப்பி ஸ்கூலுக்கு அனுப்பிட்டு இவருக்கு வேற சமைக்கணும் ஒரு ஒத்தாசை உண்டா " "நான் வாங்கி வந்த வரம் அப்படி" "நமக்கு உதவி செய்ய வேண்டாம் இவரோட வேலையாவது செய்யலாம்ல " "காலைலயே எதுக்கு இப்போ கத்திட்டு இருக்க ?" "போன வரமே  உங்கள கரெண்ட் பில் கட்ட சொன்னேன்ல இப்போ கடைசி நாளும் முடிஞ்சிடிச்சி இப்போ பைன் போட்டு கட்டனும் உங்கள நம்பி ஒரு வேலை சொன்னதுக்கு இது தான் நிலைமை" 

கனவுகளுக்கான காரணம் புரிய ஆரம்பித்தது எனக்கு ........


Wednesday, July 11, 2012

சிதறல்


வேலு தனக்கான இமெயில் முகவரியை துவக்கினான்....

முதல் நாள் கல்லூரிக்கு சென்றபோது பள்ளிக்கு சென்றதைபோல் அழுகை வராமல் சந்தோஷமாகத்தான் இருந்தது . இன்னும் நான்கு வருடத்தில் ஒரு இஞ்ஜினியர். இனி காலையில் சென்றதுமே பிரேயரில் கால் கடுக்க நிற்க வேண்டியது இல்லை,அந்த முட்டிக்கால் முட்டும் பெஞ்சில் சாயங்காலம் வரை உட்கார்ந்திருக்க வேண்டியதில்லை, கேரியரில் சாப்பாட்டை எடுத்து வந்து அதை அடுத்தவனுக்கு தெரியாமல் பாதுகாக்க வேண்டியதில்லை, முக்கியமாக பென்சிலில் படம் வரைய வேண்டியதில்லை பேனாவிலையே படம் வரையலாம் என பக்கத்து வீட்டு அண்ணா சொன்னான்.

வேலு கூகுளில் PN junction டையோடின் குண நலன்களை பற்றி தேடி கொண்டிருந்தான்......

எனது முன்னோர்களை போல் நான் பள்ளிக்கூட மாணவர்களிடம் அடை பட்டிருக்கவில்லை,எழுதி எழுதி ஆயுள் காலத்தை உடனே முடித்து கொள்வதற்கு. நான் ஒரு கல்லூரி மாணவனிடம் சேர்ந்திருந்தேன் அவன் தினத்துக்கு நாலு பக்கம் எழுதுவதே குறைவு. அதுவும் ஆசிரியர் பார்க்கும் போது எதையேனும் சும்மா கிறுக்குவான் அவ்வளவே. சந்தோஷம் தான் என்றாலும் என் இனத்தை நினைத்து பரிதாபமாக உள்ளது காலம் காலமாக நாங்கள் மனிதனுக்கு உபோயாகப்பட்டாலும் மற்றவற்றின் பரிணாம வளர்ச்சியோடு ஒப்பிடும் போது நாங்கள் வளரவேயில்லை தொட்டு எழுதும் பேனா, மை பேனா,பால் பாயிண்ட் பேனாவோடு நின்று போனோம் (சில சிறப்பு உபோயக பேனாக்களை தவிர ). ஆனாலும் பரவாயில்லை இந்த காலத்திலும் பெரும்பாலான தேர்வுகளை எழுதுவதற்கு பேனாக்களே உபோயகப்படுகின்றன அந்த மட்டில் சந்தோஷம்.

வேலு இணையத்தில் பலான படம் பார்த்து கொண்டிருந்தான்.......

முன்பு எல்லாம் என்னை ஒரு மதிப்பீட்டுக்கு பயன்படுத்தினர் ஒரு குருகுலத்தில் சேர்ந்தவன் கற்கவேண்டியவற்றை எவ்வாறு கற்றான் என்பதை என்னை பயன்படுத்தி தெரிந்து கொண்டனர். பாடசாலைகளில் பாடத்திட்டத்தை மாணவன் முழுவதுமாக பயின்றுவிட்டானா என்பதை என்னை பயன்படுத்தி தெரிந்து கொண்டனர். இப்போது அதிக மதிப்பெண் ஜாதி,குறைந்த மதிப்பெண் ஜாதி என்று என்னை பயன்படுத்தி ஜாதிகள் உருவாக காரணமாகி போனேன். தனது இளமையை பாடசாலையில்,வீட்டில்,டீயுஷன் செண்டரில் தொலைத்து என்னை எழுதி அதிக மதிப்பெண் பெறுபவன் மட்டுமே வாழ்வில் ஜீவித்திருக்க முடியும் என்று மக்கள்  நினைக்கும் அளவுக்கு மாறி போனேன். நான் தேவையற்றவன் என்று கருதும் ஒரு சில சமுக அறிஞர்களுக்கும் என்னை நீக்க வழி தெரிந்திருக்கவில்லை.

வேலு தனது கல்லூரி வாழ்க்கையை முடித்து ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தான்......