Wednesday, July 11, 2012

சிதறல்


வேலு தனக்கான இமெயில் முகவரியை துவக்கினான்....

முதல் நாள் கல்லூரிக்கு சென்றபோது பள்ளிக்கு சென்றதைபோல் அழுகை வராமல் சந்தோஷமாகத்தான் இருந்தது . இன்னும் நான்கு வருடத்தில் ஒரு இஞ்ஜினியர். இனி காலையில் சென்றதுமே பிரேயரில் கால் கடுக்க நிற்க வேண்டியது இல்லை,அந்த முட்டிக்கால் முட்டும் பெஞ்சில் சாயங்காலம் வரை உட்கார்ந்திருக்க வேண்டியதில்லை, கேரியரில் சாப்பாட்டை எடுத்து வந்து அதை அடுத்தவனுக்கு தெரியாமல் பாதுகாக்க வேண்டியதில்லை, முக்கியமாக பென்சிலில் படம் வரைய வேண்டியதில்லை பேனாவிலையே படம் வரையலாம் என பக்கத்து வீட்டு அண்ணா சொன்னான்.

வேலு கூகுளில் PN junction டையோடின் குண நலன்களை பற்றி தேடி கொண்டிருந்தான்......

எனது முன்னோர்களை போல் நான் பள்ளிக்கூட மாணவர்களிடம் அடை பட்டிருக்கவில்லை,எழுதி எழுதி ஆயுள் காலத்தை உடனே முடித்து கொள்வதற்கு. நான் ஒரு கல்லூரி மாணவனிடம் சேர்ந்திருந்தேன் அவன் தினத்துக்கு நாலு பக்கம் எழுதுவதே குறைவு. அதுவும் ஆசிரியர் பார்க்கும் போது எதையேனும் சும்மா கிறுக்குவான் அவ்வளவே. சந்தோஷம் தான் என்றாலும் என் இனத்தை நினைத்து பரிதாபமாக உள்ளது காலம் காலமாக நாங்கள் மனிதனுக்கு உபோயாகப்பட்டாலும் மற்றவற்றின் பரிணாம வளர்ச்சியோடு ஒப்பிடும் போது நாங்கள் வளரவேயில்லை தொட்டு எழுதும் பேனா, மை பேனா,பால் பாயிண்ட் பேனாவோடு நின்று போனோம் (சில சிறப்பு உபோயக பேனாக்களை தவிர ). ஆனாலும் பரவாயில்லை இந்த காலத்திலும் பெரும்பாலான தேர்வுகளை எழுதுவதற்கு பேனாக்களே உபோயகப்படுகின்றன அந்த மட்டில் சந்தோஷம்.

வேலு இணையத்தில் பலான படம் பார்த்து கொண்டிருந்தான்.......

முன்பு எல்லாம் என்னை ஒரு மதிப்பீட்டுக்கு பயன்படுத்தினர் ஒரு குருகுலத்தில் சேர்ந்தவன் கற்கவேண்டியவற்றை எவ்வாறு கற்றான் என்பதை என்னை பயன்படுத்தி தெரிந்து கொண்டனர். பாடசாலைகளில் பாடத்திட்டத்தை மாணவன் முழுவதுமாக பயின்றுவிட்டானா என்பதை என்னை பயன்படுத்தி தெரிந்து கொண்டனர். இப்போது அதிக மதிப்பெண் ஜாதி,குறைந்த மதிப்பெண் ஜாதி என்று என்னை பயன்படுத்தி ஜாதிகள் உருவாக காரணமாகி போனேன். தனது இளமையை பாடசாலையில்,வீட்டில்,டீயுஷன் செண்டரில் தொலைத்து என்னை எழுதி அதிக மதிப்பெண் பெறுபவன் மட்டுமே வாழ்வில் ஜீவித்திருக்க முடியும் என்று மக்கள்  நினைக்கும் அளவுக்கு மாறி போனேன். நான் தேவையற்றவன் என்று கருதும் ஒரு சில சமுக அறிஞர்களுக்கும் என்னை நீக்க வழி தெரிந்திருக்கவில்லை.

வேலு தனது கல்லூரி வாழ்க்கையை முடித்து ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தான்......

No comments: