Friday, June 1, 2012

நிலவில் ஒரு வீட்டு மனை....


ராயல் மூன் சிட்டி …ஒருங்கிணைந்த ஸ்பேஸ் ஷிப் நிலையத்திற்கு அருகே அழகான நகரம்..15 அடி ஆழ்த்தில் நல்ல தண்ணிர்..தரமான சாலை வசதி..சுகாதரமான சூழல்….பூங்காவுடன் கூடிய விளையாட்டு மைதானம்..அருகிலையே புதன் கிரகத்தில் பள்ளியும்..செவ்வாய் கிரகத்தில் இஞ்ஜினியரிங் கல்லூரியும் உள்ளன…மனையை பார்வையிட வாகன வசதி..முதலில் புக்கிங் செய்யும் 300 நபர்களுக்கு ஸ்பேஸ் கார் இலவசம்..குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 2 அதிர்ஷ்டசாலிகளுக்கு பம்பர் பரிசாக ராக்கட் வழங்கப்படும்….

விரைவில் இது போன்ற விளம்பரங்கள் தொலைக்காட்சி,பத்திரிக்கை, பிட் நோட்டீஸ் வடிவில் உங்களை தேடி வந்தால் ஆச்சரியபடக்கூடாது என்பதற்காகவே இந்த முன் அறிவிப்பு கட்டுரை.ஆம் நிலவில் வீட்டு மனை போட்டு விற்க ஆரம்பித்து விட்ட்து லூனார் ரிஜிஸ்ட்ரி என்ற அமெரிக்க நிறுவனம்..எந்த நிலா என்று கேட்காதீர்கள் காலங்காலமாக கால் நீட்டியபடி பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கு அதே நிலாதான்.


இதுவரை கனவிலும், கற்பனையிலும், கவிதைகளிலும் இடம் பிடித்து வந்த நிலாவிலையே நீங்கள் இடம் பிடிக்கலாம். நிலாவில் மனைகள் விற்பனைக்கு உள்ளன.அங்கே வீடு கட்டி குடியேறுங்கள் என்று அதிரடி அறிவிப்போடு கிளம்பி இருக்கிறது லூனார் ரியல் எஸ்டேட் நிறுவனம்.

விண்வெளி சுற்றுலா பிரபலமடைந்து வரும் காலம் இது. விண்வெளி மையத்தில் கட்டணம் செலுத்தினால், கோடானு கோடி கோள்கள் வலம் வரும் பிரபஞ்ச வெளிக்கு தனது விண்வெளி கப்பலில் உங்களை அழைத்துச் சென்று சில நாட்கள் தங்க வைத்து மீண்டும் உங்களை பூமியில் இறக்கிவிட்டு விடும் அந்த விண்வெளி மையம். இதற்கான கட்டணம் சுமார் 100 கோடி ரூபாய். தீபாவளிக்கு ஊருக்கு போக ஆம்னி பஸ்சுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாமல் ரயிலில் அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் ஒற்றைக்காலில் நின்று பயணம் செய்யும் நமக்கு இது மலைக்க வைக்கும் தொகை தான். ஆனால் சில வெளிநாட்டு ஜாம்பவான்கள் இந்த கட்டணத்தையும் செலுத்தி டூர் போய் வந்துவிட்டார்கள்.

எனவே இன்னும் சில ஆண்டுகளில் நம்மூரில் பண்டு பிடித்து நவக்கிரக தலங்களை 2 நாட்களில் சுற்றி விட்டு வருவது போல் இந்த ஸ்பேஸ் டூர் என்பதும் பரவலாகிவிடும். இந்த வளர்ச்சியை வைத்தே நிலவில் பிளாட் போட்டு விற்கும் திட்ட்த்தை துவங்கியிருக்கிறது அந்த நிறுவனம். ”இன்னும் சில ஆண்டுகளில் ஸ்பேஸ் டூர் சுலபமாகிவிடும் அப்போது இவ்வளவு கட்டணம் இருக்காது. பக்கத்து ஊருக்கு பஸ்சில் செல்வது போல் நிலாவுக்கு போய் வரும் காலம் வந்துவிடும். அதனால் தான் தொலை நோக்கு பார்வையுடன் நிலாவை பட்டா போட்டு விற்கிறோம்” என்று சொல்கிறது அந்த நிறுவனம்.

’கென்னடி நிலா பயணம் என்ற திட்ட்த்தின் கீழ் பல நாடுகளின் ஒத்துழைப்போடு நிலாவில் குடியேறுவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது அவ்வாறு குடியேறுவதற்கு இப்போதே நிலத்தை வாங்கி போடுங்கள்.நீங்கள் கொடுக்கும் பணம் கென்னடி திட்ட்த்தில் முதலீடு செய்யப்படும்’ என்றும் அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இத்திட்ட்த்தின் படி ஏக்கர் கணக்கில் மட்டுமே நிலம் விற்பனை செய்யப்படுகிறது அங்கு நகர்புறத்தில் ( அதாவது பூமிக்கு அருகில்) இருக்கும் இடங்களின் விலை ஒரு ஏக்கர் 5 ஆயிரம் ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. ஒதுக்குப்புறமான பகுதியில் விலை குறைவு . மனை வேண்டுவோம் கட்டணத்தை முழுமையாக செலுத்தி விட்டால் அந்த இட்த்தின் அடையாளம், விவரங்கள் அடங்கிய பத்திரம் உடனடியாக தரப்படுகிறது. எங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே என்று கேட்கும் அளவிற்கு அந்த மனைக்கு செல்லும் வழிகாட்டி குறிப்பும் தரப்படுகிறது. நிலாவின் விமான நிலையத்தில் உங்களை இறக்கி விட்டால் நீங்கள் பஸ்சோ, ரயிலோ பிடித்து வழிகாட்டி குறிப்பை பயன்படுத்தி உங்கள் நிலையத்திற்கு சென்று விடலாம்.

நிலாவின் மொத்த பரப்பளாவான 4 லட்சம் சதுர கிலோ மீட்டரில் சுமார் 2 சதவீத இடம் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. அமைதி நகரம்,கனவு ஏரி, காதல் கடல், புயல் பூமி இதெல்லாம் அங்கே அமைய உள்ள நகரங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள் (இந்த கேகே நகர், ஜேஜே நகர்லாம் வைக்க மாட்டாங்களாம் ) எல்லாவற்றிலும் கொசுறு எதிர்பார்க்கும் மக்களையும் இவர்கள் ஏமாற்றவில்லை கனவு ஏரி என்ற இட்த்தில் 2 பிளாட் வாங்கினால் 30% தள்ளுபடியாம்.

உணவு தண்ணீர் போன்றவற்றிற்கு என்ன செய்வது என்று யோசிக்க தேவையில்லை உணவு, தண்ணீர்,பிராண வாயு போன்றவை விற்கப்படும் ஓட்டல்கள் அங்கே அமைய உள்ளன.ஓட்டல்களில் வாங்கினால் செலவு பிடிக்கும் என்று யோசிக்கும் நபராக இருந்தால் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு சுற்றுலா போவது போல் பூமியில் இருந்து பிளாஸ்க்கில் தண்ணீரும் .பாக்கெட்டில் ஆக்சிஜனும் எடுத்துச்செல்ல்லாம்.

புதுமை விரும்பிகள் தங்கள் மனைவிக்கு சர்ப்ரைஸ் பரிசு அளிக்க விரும்பினால், நிலாவில் இடம் வாங்கி கொடுத்து அசத்தலாம் . அட்வான்ஸ் புக்கிங் பத்திரத்தை நீங்கள் காட்டியதும் என் வாழ்க்கை போச்சே என்று அவர் அலறி அரற்றி உங்களை மனநல மருத்துவரிடம் கூட்டிச்செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பாடு. இன்னோரு முக்கியமான விஷயம் நீங்க நிலாவில் பிளாட் வாங்க போவதை அரசியல்வாதிகளுக்கு தெரியாம கமுக்கமா பண்ணுங்க இல்லேன்னா அங்கையும் நில அபகரிப்பு சமாச்சாரங்கள் தலை துக்கிடும் சொல்லிட்டேன்.

இதையெல்லாம் தாண்டி ஒரு சின்ன சந்தேகம்..நாமெல்லாம் அங்க போயிட்டா நிலாவுல வடை சுடுற பாட்டி எங்க கடைய விரிப்பார்…?

டிஸ்கி1: மேலும் விவரங்களுக்கு http://lunarregistry.com/

டிஸ்கி 2: இந்த கட்டுரை தினமலர் திருச்சி பதிப்பில் சண்டே ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது

No comments: