Thursday, May 19, 2011

தேசிய திரைப்பட விருதுகள்

தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா; சிறந்த இயக்குனர் வெற்றிமாறன்!

புதுடெல்லி, மே 19,2011

58-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், முக்கிய விருதுகளை வென்று தமிழ் சினிமா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.


சிறந்த நடிகர் தனுஷ்...

இம்முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இருவர் பகிர்கிறார். 'ஆடுகளம்' படத்துக்காக, தனுஷ் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன், 'ஆதாமிண்டே மகன் அபு' என்ற மலையாளப் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை, நடிகர் சலிம் குமார் பகிர்ந்துள்ளார்.

வெற்றி மாறனுக்கு 2 விருதுகள்...

ஆடுகளம் படத்துக்காக சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை ஆசிரியர் ஆகிய இரு பிரிவுகளிலும் தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறார், இயக்குனர் வெற்றி மாறன்.

இயக்குனர் பாலுமகேந்திராவிடம் சினிமா பயின்றவர்களில் குறிப்பிடத்தக்கவரான வெற்றி மாறன், 'பொல்லாதவன்' படத்தின் மூலம் தனது தனித்துவத்தை தமிழ் சினிமாவில் பதிவு செய்தவர்.

சிறந்த படத்துக்கான 'சிவராம் கரந்த்' விருதினை, 'ஆடுகளம்' படம் வென்றுள்ளது.

கெளரவிக்கப்பட்ட 'தென்மேற்குப் பருவக்காற்று'...

வர்த்தக ரீதியில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாவிட்டாலும், ஆழமான கதைக் களத்தைக் கொண்ட 'தென்மேற்குப் பருவக்காற்று', சிறந்த மாநில மொழி திரைப்படம் பிரிவில், சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை சரண்யா...

தேசிய விருதுகளில் சிறந்த நடிகர் பிரிவுக்கு இணையாக உயரியதாக போற்றப்படும், சிறந்த நடிகை விருதை, 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்துக்காக நடிகை சரண்யா பொன்வண்ணன் பெறுகிறார்.

இம்முறை சிறந்த நடிகை விருதையும் இருவர் பகிர்ந்துகொள்கின்றனர். மராத்தியின் 'பாபூ பந்த் பாஜா' என்ற படத்துக்காக நடிகை மிதாலீ ஜக்தாப் பரந்தர் என்ற நடிகை இவ்விருதை பகிர்கிறார்.

வைரமுத்துக்கு விருது...

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்காக, கவிஞர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

தம்பி ராமையா...

'மைனா' படத்துக்காக தம்பி ராமையாவுக்கு சிறந்த உறுதுணை (சப்போர்ட்டிங்) நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

நகைச்சுவை நடிகராக வலம் வந்த தம்பி ராமையா, 'மைனா' படத்தில் நகைச்சுவையையும் தாண்டி உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அசத்தி, ரசிகர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்தது கவனத்துக்குரியது.

சிறந்த நடன இயக்குனர்...

ஆடுகளம் படத்துக்காக சிறந்த நடன இயக்குனர் விருதை, தினேஷ் குமார் தட்டிச் சென்றுள்ளார்.

எந்திரனுக்கு 2 விருதுகள்...

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவான 'எந்திரன்', இரண்டு பிரிவுகளில் தேசிய விருதைப் பெற்றுள்ளது.

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் எந்திரன் தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த திரைப்படம் 'ஆதாமிண்டே மகன் அபு'!

58 தேசிய திரைப்பட விருதுகளில், இந்திய அளவில் சிறந்த திரைப்படத்துகான விருதை மளையாள மொழியின் 'ஆதாமிண்டே மகன் அபு' என்ற படம் வென்றுள்ளது.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருதை சல்மான் கான் நடித்த 'தபாங்' கைப்பற்றியுள்ளது.

No comments: